Truth Invites...
Saturday, September 1, 2012
அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் : 4)
நன்மை என்பது - தொழுகையை நிலைநாட்டுதலும் ஜகாத் வழங்குதலும் என்று இதைத் தொடர்ந்து இறைவன் கூறுகிறான்.
தொழுகையை நிலைநாட்டுதல் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம். ஜகாத் என்பது ஒரு முஸ்லிம் தனது சொத்துக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டாயமாக வழங்க வேண்டிய கடமையாகும்.
ஏற்கனவே வாரி வழங்குவதைப் பற்றிக் கூறிவிட்டு ஜகாத் என்பதை ஏன் இறைவன் கூற வேண்டும்? அதற்கும் நியாயமான காரணம் உள்ளது.
கால்நடைகளில் இத்தனை சதவிகிதம், தாவரங்களில் இத்தனை சதவிகிதம், அவற்றைத் தவிர ஏனையவற்றில் இரண்டரை சதவிகிதம் என்ற கணக்குப்படி வழங்க வேண்டியது. ஜகாத் இது பற்றி தனியாக இறைவன் கூறுவதால் இதற்கு முன்னர் கூறப்பட்டவை ஜகாத் அல்லாமல் - அதை விட அதிகமாக - மனவிருப்பத்துடன் செய்ய வேண்டிய - இறைவனது அன்பையும் நியாயத் தீர்ப்பு நாளின் பரிசையும் எதிர்பார்த்துச் செய்கின்ற தர்மத்தைத் தான் என்பதை அறியலாம்.
கடமையாக்கப்பட்ட அளவுடன் தர்மத்தை நிறுத்திக் கொண்டால் அது முழுமையான நன்மையாகாது. மாறாக ஜகாத் எனும் கட்டாயக் கடமையான தர்மத்தை வழங்குவதுடன் மேலும் அதிகமாக மேற்சொன்னவர்களின் நலனுக்காகச் செலவிடுவதே முழுமையான நன்மையாகும். இதனால் இரண்டையும் தனித்தனியாக இறைவன் கூறுகிறான்.
தொழுகை, நோன்பு போன்ற இறைவனை நினைவு கூறுகின்ற வணக்கங்களைக் கட்டாயக் கடமையாக்கிய இறைவன், மனிதனை நினைவு கூறக்கூடிய தர்மத்தையும் கடமைகளில் ஒன்றாக ஆக்கி விடுகிறான். இத்தகைய அர்த்தமுள்ள மார்க்கம் இஸ்லாம் தவிர ஏதுமில்லை என்பதற்கு இது சரியான சான்று.
நன்மை என்பது - வாக்களித்தால் அதை நிறைவேற்றுவதாகும் என்று இறைவன் கூறுகின்றான்.
அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்காக எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அவற்றில் ஒரு சதவிகிதத்தைக் கூட அவர்கள் நிறைவேற்றுவதில்லை. மதங்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை என்று பிரச்சாரம் செய்வோரிடமும் இந்த வாக்குமீறல் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றது. சராசரி மனிதர்களும் கூட அப்போதைக்கு தப்பித்து கொள்வதற்காக வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றி வருகின்றனர்.
பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே வாக்குறுதி வழங்கும் தன்மையைப் பெற்றுள்ளான். மனிதனுக்குத் தனிச் சிறப்பாக வழங்கப்பட்ட இந்தத் தீமையை மனிதன் கேவலப்படுத்துகிறான்.
தனது சொல்லை - தனது எதிர்பார்ப்பை - தனக்குக் கீழே உள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனிதன் வாக்குறுதியை மீறும் போது தனது சொல்லைத் தானே அவமதித்தவனாக ஆகின்றான். பிறருக்கு ஆசையூட்டி ஏமாற்றியவனாக ஆகின்றான்.
நன்மையை நாடுபவன் - உண்மை முஸ்லிம் - தான் அளிக்கின்ற வாக்குறுதி எத்துணை கடினமானதாக இருந்தாலும் நிறைவேற்றுவான். அதனால் எத்தனை இழப்புக்கள் ஏற்பட்டாலும் கவலைப்பட மாட்டான். வெறும் சடங்குகளையும் புறச் செயல்களையும் மட்டுமே நிறைவேற்றி விட்டு மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையானால் அவன் முழுமையாக நல்லறம் செய்வதன் என்று இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.
(உண்மை முஸ்லிம்களாகிய) அவர்கள் தம்மிடம் அடைக்கலப் பொருட்களையும் தமது வாக்குறுதிகளையும் பேணி நடப்பர்.
(அல்குர்ஆன் 23:8)
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! நிச்சயமாக வாக்குறுதிகளும் விசாரிக்கப்பட உள்ளன.
(அல்குர்ஆன் 17:34)
வாக்குகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவது சிறப்புக்குரிய ஒரு காரியம் என்று மட்டும் இஸ்லாம் கூறவில்லை. மாறாக அது ஒரு கட்டாயக் கடமை. அதை நிறைவேற்றாவிட்ôல் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் அது பற்றியும் விசாரிப்பான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஒரு வாக்குறுதியளிக்கிறான். அதை நிறைவேற்றுவதிலோ நிறைவேற்றாமலிருப்பதிலோ கடவுளுக்கு சம்பந்தம் இல்லை.
அப்படித் தான் எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் மனிதனுக்கு மனிதன் அளிக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அதையும் விசாரணை செய்து நீதி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கடவுளை மறந்து விட்டு மனிதனை நினைக்கச் சொல்பவர்கள் நிறைவேற்றாத - நிறைவேற்ற நினைக்காத நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதைப் பார்க்கிறோம்.
கடவுளை நினைத்து அவனுக்குப் பயந்து நடக்கும் முஸ்லிம்கள், மனிதனுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகின்றனர். இதற்குக் காரணம் இறைவன் அதை ஒரு கடமையாக்கியிருப்பது தான்.
பொய் பேசுவதும் அமானித மோசடி செய்வதும் வாக்கு மீறுவதும் சந்தர்ப்பவாதிகளின் அடையாளம் என்று நபி(ஸல்) கூறியதிலிருந்து (புகாரி) கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணரலாம்.
முத்தாய்ப்பாக மிக முக்கியமான நன்மையை இறைவன் சொல்லித் தருகின்றான்.
நன்மை என்பது... வறுமையிலிம், துன்பத்திலும், போரின் போதும் பொறுமையுடனிருப்பதுமாகும்.
மனிதனிடம் காணப்படும் பெரும்பாலான தீமைகளுக்கும் ஒருவன் மற்றவன் மீது அநீதி இழைப்பதற்குக் காரணம் பொறுமையின்மை தான். இதை நீக்குமாறு இறுதியாக இறைவன் அறிவுறுத்துகிறான். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கட்டங்களை இங்கே குறிப்பிடுகிறான்.
வறுமையின் போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். வறுமையை சகித்துக் கொள்ள வேண்டும். வறுமை ஏற்பட்டதற்காக வரம்பு மீறிடக் கூடாது. இது தான் நன்மை! என்று இறைவன் கூறுகிறான்.
தாங்க முடியாத வறுமை ஏற்படும் போது; எதிர்பாராத இழப்புக்கள் ஏற்படும் போது அதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவன் தற்கொலை செய்து கொள்கிறான். அல்லது வறுமையை நீக்க பிறரது பொருளைத் திருடுகிறான். அபகரிக்கிறான்; மோசடி செய்கிறான். தவறான அத்தனை வழிகளிலும் வறுமையை விரட்ட முயல்கிறான். இழப்பைச் சரிகட்ட எண்ணுகிறான். இவையனைத்துக்கும் காரணம் வறுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாதது தான். ஒரு முஸ்லிம் அவ்வாறு நடக்கக் கூடாது.
எவ்வளவு தான் வறுமை வாட்டிய போதும் பொறுமையிழக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் மனிதன் தனக்குத் தானே செய்து கொள்ளும் அநீதியையும், மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் அநீதியையும் தடுத்து நிறுத்துகிறான். வெளிப்படையான செயல்களை மட்டும் நிறைவேற்றி விட்டு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருவன் பொறுமையைக் கைக்கொள்ளத் தவறினால் அவன் நன்மையைப் பெற்றவனாக முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.
அடுத்து துன்பத்தின் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறான்.
நோய் நொடிகள் மனிதனுக்கு ஏற்படும் போது அதைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லாதவனும் தற்கொலை செய்கிறான். அல்லது நோய் தீருவதற்காக மௌட்டீகமான செயல்களில் ஈடுபட்டு பகுத்தறிவையும் நிம்மதியையும் இழக்கிறான்.
சாமியார்கள், மந்திவாதிகள், காணிக்கைகள், தாயத்துக்கள் என்று அறிவுக்குப் பொருந்தாத பரிகாரங்களைத் தேடிச் சென்று செல்வத்தையும் அறிவையும் மனிதன் இழப்பதற்குக் காரணம் துன்பத்தைச் சகித்துக் கொள்ளும் பக்குவமின்மை தான்.
இதைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவதன் மூலம் மனிதனுக்கு நிம்மதி வழங்கும் வழியை இறைவன் காட்டித் தருகிறான்.
உலகத்தில் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் போது அப்பாவிகள் பாதிக்கப்படும் போது, ஏமாற்றுப் பேர்வழிகள் கொட்டமடிக்கும் போது இவற்றை கண்ணுறும் மனிதன் கண்டும் காணாதிருக்க விரும்புகிறான். இந்த அக்கிரமங்களை எதிர்த்தால் தனது சுகம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறான். தேவையில்லாத சிரமங்களை ஏன் சுமக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதன் காரணமாக உலகத்தில் எவ்வளவு தான் அக்கிரமங்கள் நடந்தாலும் அதை எதிர்த்துப் போராட - குரல் கொடுக்க - பாதிக்கப்பட்டோருக்கு உதவ தயங்குகிறான். இந்தத் தயக்கத்திற்குக் காரணம் இந்தச் சிரமங்களைத் தாங்கும் அளவுக்கு அவனுக்குப் பொறுமை இல்லாதது தான்.
சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போதும் அசத்தியத்தை எதிர்க்கும் போதும் பொருளிழப்புக்கள் ஏற்படலாம். உயிரிழப்புக்கள் ஏற்படலாம். உடல் உறுப்புக்களை இழக்க நேரிடலாம். அடி உதைகள் பரிசாகக் கிடைக்கலாம். குடும்பத்தவர் பாதிக்கப்படலாம். ஆனாலும் மக்களின் நன்மைக்காக - நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏற்படக் கூடிய இந்தச் சிரமங்களைக் காரணம் காட்டி நான் இந்தக் கடமையிலிருந்து விலக மாட்டேன் என்று உறுதியை மனிதன் பெற்று விட்டால் அக்கிரமத்தை அடியோடு ஒழிக்கலாம்.
இதன் காரணமாகத் தான் போரின் போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென இறைவன் வலியுறுத்துகிறான். இந்த மூன்று கட்டங்களிலும் பொறுமையாக இருப்பதால் மனிதர்களுக்குத் தான் நன்மை இருக்கிறது; பொறுமையை மனிதன் கடைப்பிடிக்காவிட்டால் இறைவனுக்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.
மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடிய பொறுமையையும் நன்மைகளில் இறைவன் சேர்த்திருப்பது இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம்; அது சடங்குகளின் தொகுப்பன்று என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.
இந்த காரியங்களில் ஒன்றிரண்டை மட்டும் செய்து விட்டு மற்றவற்றை விட்டு விட முடியாது என்பதற்காக "இவற்றைக் கடைப்பிடிப்போர் தாம் (தமது நம்பிக்கையை) உண்மையாளர்கள் இவர்கள் தாம் இறையச்சமுடையவர்கள் என்று கூறுகிறான்.
இறைவனை ஏற்றிருப்பது உண்மையானால் இறைவனை அஞ்சுவது உண்மையானால் - இத்தனை பணிகளையும் செய்து தனகுக்கும், ஏனை மாந்தருக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று முடிக்கிறான்.
இஸ்லாத்தின் உயிரோட்டமான அடிப்படையை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் - இஸ்லாத்தை ஆராய விரும்புவோருக்கும் - இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்குமுள்ள வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கும் இந்த ஒரு வசனம் போதுமானதாகும்.
இஸ்லாத்தின் பெயரால் கதைகளை இட்டுக்கட்டி சடங்குகளை உருவாக்கி ஏமாற்றிப் பிழைப்போருக்கும் அவர்களிடம் ஏமாந்தவர்களுக்கும் எச்சரிக்கை செய்வதற்கும் இந்த ஒரு வசனமே போதுமானதாகும். இதை உணர்ந்து நடக்க வல்ல அல்லாஹ் உதவுவானாக.
மனிதன் இவ்வுலகில் வாழும் போது நேர்மை, தானம், தர்மம், வீரம் போன்ற பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. அந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கான பயிற்சியே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட வணக்க வழிபாடுகள் என்பது இவ்வசனத்தின் சாரம்.
அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் 3)
இறைவனது கட்டளைப்படி நடப்பதன் மூலம் தான் மனிதன் இவ்வுலகிலும் நல்வாழ்வு வாழ முடியும். மறுமையிலும் வெற்றி பெற முடியும் என்றால் இறைவனது கட்டளைகளை எப்படி அறிந்து கொள்வது? கடவுள் மனிதன் மீது மேலாடி அருள்வாக்குக் கூறுவதாக மக்களை ஏமாற்றும் மதகுருக்கள் வழியாகவா? கனவில் வந்து கடவுள் கட்டளையிட்டார் என்று ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள் வழியாகவா? எந்த வழியில் இறைவன் மனிதர்களுக்கு தன் கட்டளையைத் தெரிவிக்கிறான்?
மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றாமல் கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியுடன் திகழ்ந்த - தன்னலம் மறந்து மக்களுக்காகவே வாழ்ந்த நல்லொழுக்கம் நன்னடத்தை நற்பண்புகள் ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்டிருந்த நல்லவர்களை இறைவன் தன் தூதர்களாகத் தேர்வு செய்து வானவர்கள் வழியாக அவர்களுக்கு வேதங்களை வழங்கினான். அந்த வரிசையில் இறுதித் தூதராக நபிகள் நாயகத்தைத் தேர்வு செய்து குர்ஆன் எனும் அற்புத வேதத்தை வழங்கினான். அதில் தனது கட்டளைகளை இறைவன் தெளிவாக விளக்கினான்.
வானவர்கள் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவன் வழங்கிய வேதங்கள் வழியாக மட்டுமே இறைவனது கட்டளைகளை மனிதன் அறிந்து கொள்ள முடியும். மக்களை ஏமாற்றித் தங்களை வளர்த்துக் கொள்ளும் மதகுருமார்கள் வழியாக அதை அறிய முடியாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.
"நன்மை என்பது அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும் வேதத்தையும், நபிமார்களையும் நம்புவதுதான்'' என்று இந்த வசனத்தில் இறைவன் இதைத் தான் குறிப்பிடுகிறான்.
கடவுளை மற! மனிதனை நினை! என்று நாத்திகம் பேசுவோரின் வாதத்தையும் மனிதனை மறந்து விட்டு கடவுளை நினை என்று கூறும் போலி ஆத்திகர்களின் வாதத்தையும் இஸ்லாம் முற்றாக மறுக்கின்றது. கடவுளையும் நினைக்க வேண்டும். அதே நேரத்மல மனிதனையும் நினைக்க வேண்டும். ஒன்றை மறந்து விட்டுத் தான் இன்னொன்றை அடைய வேண்டுமென்பதில்லை. இரண்டையும் ஒரே நேரத்தில் நினைக்க முடியும். இறைவன் மனிதனுக்கு எதிரி அல்லன். மனிதனை நினைக்கும் வழியை இறைவனைத் தவிர வேறு எவரும் சொல்லித் தர முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
இதனால் தான் "நன்மை என்பது''செல்வத்தில் விருப்பமிருந்தாலும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும்,யாசிப்போருக்கும் அடிமைகளை விடுவிப்பதற்காகவும் செல்வத்தை வாரி வழங்குவது தான்'' என்று இறைவன் கூறுகிறான். வாரி வழங்கச் சொல்வதற்கு இஸ்லாம் வகுத்துள்ள இந்த இலக்கணத்திலும் அர்த்தம் உள்ளது.
செல்வத்தில், சொத்து சுகத்தில் ஆசை இருக்கும் போதே செலவு செய்வது தான் நன்மையான காரியம். ஆரோக்கியத்துடனும், திடகாத்திரத்துடனும் செல்வத்தை அனுபவிக்கும் நிலையிலும் இருக்கும் போது செய்யப்படும் தர்மமே நன்மை தரக்கூடியது.
படுக்கையில் வீழ்ந்து, திரட்டிய செல்வத்தை அனுபவிக்க இயலாத நிலைக்குச் சென்று, யாருக்காகச் செல்வத்தைத் திரட்டினானோ அவர்களை அந்தச் செல்வமே தறுதலைகளாக மாற்றியதைக் காணும் நேரத்தில் அவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டு ஆசையுடன் கட்டிய பங்களாவின் வராந்தாவில் நாற்றமெடுத்த ஆடையுடன் நாட்கணக்கில் போடப்பட்டு மலஜலத்தில் புரண்டு, உறவினர்களால் "கிழம் எப்போது சாகும்'' என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் தர்மம் செய்வதில் நன்மை இல்லை. இதில் எந்தத் தியாகமும் இல்லை.
இந்த நிலையெல்லாம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அந்த நிலை ஏற்படுவதற்கு முன்பாக செல்வத்தில் பேராசை இருக்கும் நேரத்திலேயே செல்வத்தை வாரி வழங்குங்கள் என்று இஸ்லாம் போதிக்கின்றது.
செல்வந்தனாவதற்கு ஆசைப்பட்டு, வறுமை ஏற்படுமோ என்று அச்சங்கொண்டு, ஆரோக்கியமானவனாக இருக்கும் போது செய்யும் தர்மமே சிறந்த தர்மம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நீங்கள் விரும்பக் கூடியவதைச் செலவிடாத வரை நீங்கள் நிச்சயம் நன்மை அடைய முடியாது.
(அல்குர்ஆன் 3:92)
(நல்லவர்கள்) உணவில் விருப்பம் இருந்தும் அதை ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் வழங்குவார்கள். நாங்கள் அல்லாஹ்வின் திருமுகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. (என்றும் கூறுவார்கள்)
(அல்குர்ஆன் 76:8)
தமக்கு வறுமை இருந்தாலும் தம்மை விட மற்றவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
(அல்குர்ஆன் 59:9)
கடவுளை மறந்து விட்டு மனிதனை நினைக்க வேண்டும் என்ற வரட்டுத் தத்துவத்தை விட கடவுளை நினைத்து அவன் கட்டளைக்குப் பணிந்து மனிதனையும் நினைப்பது அதிகப் பயனுள்ளதாகும். மனிதனை நினைக்கச் சொல்லும் நாத்திகர்களை விட கடவுளையும் மனிதனையும் நினைக்கும் முஸ்லிம்கள் பல்லாயிரம் மடங்கு வாரி வழங்குவதை நடைமுறையிலும் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வம் இறைவனால் தரப்பட்டது. அவனது கட்டளைப்படி வாரி வழங்குவது தனது கடமை என்று முஸ்லிம்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் செல்வந்தர்களை விசாரிப்பான். அப்போது நான் ஆடையின்றி உன்னிடம் வந்த போது எனக்கு ஏன் நீ ஆடை தரவில்லை என்று கேட்பான். அதற்குச் செல்வந்தன் "இறைவா! நீயோ தேவையற்றவன். உனக்கு எதற்கு ஆடை? "நீ எப்போது என்னிடம் ஆடை கேட்டாய்?'' என்று கேட்பான். அதற்கு இறைவன் ஒரு ஏழை ஒரு நாள் உன்னிடம் ஆடை கேட்டு வரவில்லையா? என்று திருப்பிக் கேட்பான். மேலும் நான் பசியுடன் உன்னிடம் வந்த போது எனக்கு ஏன் உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன் இறைவா! நீயோ எந்தத் தேவையுமற்றவன். உனக்கேது பசி என்பான். அதற்கு இறைவன் ஒரு ஏழை உன்னிடம் உணவு கேட்டு வந்தபோது அவனை நீ விரட்டவில்லையா என்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
(ஹதீஸின் கருத்து)
ஏழைகளுக்கு வழங்குவதைத் தனக்கு வழங்குவதாக கருதக் கூடியவன் எல்லாம் வல்ல ஏக இறைவன். இத்தகைய இறைவனை இஸ்லாம் தவிர எந்த மார்க்கமும் கூறவில்லை.
மனிதர்களின் நலனில் மனிதனை விட அதிகம் அக்கறை செலுத்தக் கூடிய இறைவன் என்பதால் தான் மனிதர்களுக்கு வழங்குவதையும் தனக்குச் செய்யும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான். இஸ்லாம் அதன் போதனைகள் எவ்வளவு அர்த்தம் நிறைந்தது என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.
யாருக்குச் செலவிட வேண்டும் எந்த வரிசைப்படி அது அமைய வேண்டும் என்பதற்கு இஸ்லாம் கூறும் இலக்கணமும் அர்த்தம் நிறைந்தது. ஊருக்குத் தானம் செய்வதற்கு முன் உறவினர்களுக்குத் தானம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. உறவினர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனது உறவினர்களின் உண்மையான நிலவரத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். யாரெனத் தெரியாதவர்களின் உண்மை நிலையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது. பலரிடமும் யாசித்து செல்வத்தை அதிகரிக்க எண்ணுவோர் யாசிப்பவர்களில் இருக்கக்கூடும். ஒவ்வொருவரும் தத்தமது உறவினர்களுக்கு வழங்கினால் யாசிப்போர் இருக்க மாட்டார்கள்.
அறியாதவர்களுக்குச் செய்யும் தர்மத்தில் மனிதன் இயற்கையிலேயே விளம்பரம் தேடுவான். நாலுபேருக்குத் தெரியும் வகையில் தான் வழங்குவான். உறவினர்களுக்கு வழங்கும் போது விளம்பரம் தேடுவது மிகவும் குறைவாக இருக்கும். இவனோ, இவனது தாயோ தந்தையோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உறவினர்களிடம் ஏதாவது ஒரு வகையில் உதவி பெற்றிருக்கக் கூடும். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் கடமையும் இதனால் நிறைவேறுகின்றது.
உறவினர்களுக்கு வழங்கும் வழக்கமுடையவன் நாலணா எட்டணா என்று வழங்கமாட்டான். அதில் அவனையும் அறியாமல் தாராளத் தன்மை ஏற்படும். தேவைக்கேற்ப உதவும் நிலை அவனையுமறியாமல் ஏற்படும். யாரெனத் தெரியாதவர்களிடம் இவ்வாறு தாராளம் காட்டுவதில்லை.
யாரெனத் தெரியாதவர்களிடம் உதவி கேட்டு வருபவன் இன்னும் பலரிடம் செல்லக் கூடும்! என்று தர்மம் செய்பவன் நினைப்பதால் தர்மத்தைச் சுருக்கி விடுகிறான். உறவினர்களுக்கு நாம் தானே கொடுத்தாக வேண்டும் என்று நினைப்பதால் அந்த நினைப்பு தாராளமாக வழங்க அவனைத் தூண்டுகிறது.
கடவுளையும் மனிதனையும் நினைக்கும் முஸ்லிம்கள் பல்லாயிரம் மடங்கு வாரி வழங்குவதை நடைமுறையிலும் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வம் இறைவனால் தரப்பட்டது. அவனது கட்டளைப்படி வாரி வழங்குவது தனது கடமை என்று முஸ்லிம்கள் நம்புவதே இதற்குக் காரணம்.
ஏழைகளுக்குச் செய்யும் தர்மம், தர்மம் மட்டும் தான். உறவினர்களுக்கு வழங்கும் தர்மம், தர்மமும் உறவினர்களை அனுசரித்தலும் ஆகும் என்பது நபிமொழி.
தந்தையை இழந்து நாதியற்று நிற்கும் அனாதைகளுக்காகச் செலவிடுவதை இரண்டாவதாக இவ்வசனம் கூறுகிறது. அனாதைகளுக்கு வழங்குதல் என்றால் அவர்களுக்கு ஐந்தோ பத்தோ வழங்குவது மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக அனாதைகளைத் தம் சக்திக்கேற்பப் பொறுப்பேற்றுக் கொள்வது தான் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டி "நானும் அனாதையைப் பொறுப்பேற்றவனும் இப்படி (மறுமையில்) இணைந்திருப்போம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல்(ரலி)
நூல்கள்: புகாரி, அபூதாவூத்.
நான்கு பிள்ளைகள் உள்ள ஒருவர் தனக்குச் சக்தியிருந்தால் ஐந்தாவதாக ஒரு அனாதையையும் தன் பிள்ளை போல் வளர்த்து வந்தால் நபிகள் நாயகத்துடன் நெருக்கமாக இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது என இஸ்லாம் கூறுகின்றது. தந்தை உயிரோடு இருந்தால் நாம் இப்படி ஆகியிருப்போமா என்று எண்ணி எண்ணி ஏங்கும் அனாதைகளின் துயர் துடைப்பது தான் நன்மையே தவிர திசைகளை நோக்குவது அல்ல என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. மூன்றாவதாக ஏழைகளுக்கு வழங்குவதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இந்த இடத்தில் மூலத்தில் மிஸ்கீன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கவள உணவு, இரண்டு கவள உணவுகள் யாரை விரட்டுகின்றதோ அவன் மிஸ்கீன் அல்லன். தனது வாழ்க்கைக்குப் போதுமான செல்வம் இல்லாதவனே மிஸ்கீன் ஆவான் என்பது நபிகள் நாயகத்தின் விளக்கம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
ஒரு வேளைச் சோற்றுக்காக வீடு வீடாக யாசிக்கக் கிளம்புபவனை இங்கே கூறுôமல் யாரிடமும் யாசிக்காமல் போதிய வருமானமின்றி இருப்பவனை இவ்வசனம் கூறுகின்றது.
நூறு ரூபாய் தேவையுடையவனுக்கு தொண்ணூறு ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது என்றால் அவன் மிஸ்கீன்; ஏழை. அத்தகையோர் கிடைக்கும் கஞ்சியைக் குறைத்துக் கொள்வார்களே தவிர யாரிடமும் யாசிக்க மாட்டார்கள். இத்தகையோருக்குத் தர்மம் செய்து பற்றாக்குறையை நிவர்த்திக்கச் சொல்கிறது இஸ்லாம்.
மிஸ்கீன் என்பவன் யாரிடமும் யாசிக்க மாட்டான் என்றால் எப்படி அவனுக்குத் தர்மம் செய்ய முடியும்? தர்மம் செய்பவன் தானாக விசாரித்து தேடிச் சென்று தான் வழங்க முடியும். நம்மிடம் கேட்டு நம் கதவைத் தட்டுவார்கள் என்று காத்திராமல் மக்களுடன் பழகி அவர்களின் நிலையை அறிந்து உதவுவது இங்கே மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது.
இஸ்லாம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று. வறியவர்களை தேடிச் சென்று வாரி வழங்குவதே இஸ்லாம் என்பதை இவ்வசனம் கூறுகின்றது.
இவ்வசனத்தில் நான்காவதாக வழிப்போக்கர்கள் கூறப்படுகின்றனர். உள்ளூரில் வசதிமிக்கவர்களாக இருந்தாலும் வெளியூர் பயணம் சென்றிருக்கும் போது திக்கற்ற நிலையை அடைந்தோர் வழிப்போக்கர் எனப்படுகின்றனர்.
நாணயங்கள் பயன்படுத்தப்படும் இன்றைய நிலையில் வழிப்போக்கர்களின் நிலையை உணர முடியாது. பண்டமாற்று முறை மட்டும் அமுலில் இருந்த காலத்தில் எவ்வளவு வசதி படைத்தவரானாலும் வெளியூரில் சிரமப்பட்டே ஆக வேண்டும். பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் இராது. இத்தகைய காலத்தில் எவ்வளவு பெரிய செல்வந்தனும் வெளியூரில் ஏழையின் நிலையில் தான் இருப்பான்.
இதனால் தான் வெளியூரிலிருந்து வரும் அறிமுகமற்றவர்களையும் இஸ்லாம் விருந்தாளிகள் என்கிறது. இவ்வாறு வரக்கூடியவர்களுக்கு மூன்று நாட்கள் வரை உணவிட்டு உபசரிப்பதை இஸ்லாம் வலியுறுத்தியது. அன்றைய நிலையில் இவ்வாறு உபசரிக்காவிட்டால் வழிப்போக்கன் செத்து மடிய வேண்டும்.
ஒரு ஊராரிடம் மூஸா (அலை), கிள்று (அலை) ஆகியோர் சென்ற போது அவ்வூரார் விருந்தளிக்க மறுத்தனர். இதை மூஸா (அலை) அவர்கள் பெரிய குற்றமாகக் கருதியதும் இந்த காரணத்தால் தான்.
இன்று ஏழைகள் மட்டுமே வழிப்போக்கர்களாக இருக்க முடியும் அல்லது பணத்தைப் பறிகொடுத்தவர்கள் மட்டுமே திக்கற்றவர்களாக இருக்க முடியும்.
ஐந்தாவதாக யாசிப்போரை பற்றி இறைவன் கூறுகிறான்:
யாசித்து வருபவன் தான் பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருப்பவன் என்று மக்கள் நினைக்கின்றனர். ஓரளவு அது உண்மையாகக் கூட இருக்கலாம். அவ்வாறிருந்தும் யாசிப்போரை ஐந்தாவது நிலையில் இஸ்லாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
இஸ்லாம் வரிசைப்படுத்தக் கூடிய முந்தைய நான்கு பிரிவினர்கள் முறையாக கவனிக்கப்பட்டால் யாசிபோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது உறவினர்களில் உள்ள ஏழைகளைக் கவனித்துக் கொண்டால் பற்றாக்குறை உள்ளவர்களைத் தேடிச் சென்று அதை நிவர்த்தி செய்தால், அனாதைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டால்; வழிப்போக்கர்களின் நிலையறிந்து உதவி வந்தால் யாசிப்பதற்கு எவருமே இருக்க மாட்டார்கள்.
இந்த நான்கு நிலைகள் தான் ஒருவனை யாசிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகின்றன. யாசிக்கின்றவர்கள் எவராக இருந்தாலும் வசதிமிக்க உறவினர்களால் அவர்கள் கவனிக்கப்படாமல் இருப்பார்கள். அல்லது தமது வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய வருமானமில்லாது, மற்றவர்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருப்பார்கள். அல்லது ஆதரிப்போர் இல்லாத அனாதைகளாக இருப்பார்கள் அல்லது வழிப்போக்கராக வந்த இடத்தில் ஏற்பட்ட கஷ்டம் யாசிக்கத் தூண்டி இருக்கும். இந்நான்கு காரணங்களையும் களையுமாறு இஸ்லாம் கூறுகின்றது.
இந்நான்கு காரணங்களும் களையப்பட்ட பின்னரும் ஒருவன் யாசிக்க வருகிறான் என்றால் அவன் பொருளாதாரத்தை உழைக்காமல் அதிகம் திரட்டவே யாசிக்கிறான். இத்தகையோர் கடைசி நிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள் தாம் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள்.
யாசித்து வருவோரை விரட்டாதீர்கள். (93:10) என்று அல்லாஹ் கூறினாலும் யாசிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் வழி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயம் யாசிப்பதற்குரிய எல்லா தகுதிகளும் இருந்தும் எந்நிலையிலும் யாரிடமும் யாசித்ததில்லை.
பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களின் சுயமரியாதையைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்க மாட்டார்கள். இத்தகையோருக்காக நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான்.
(அல்குர்ஆன் 2:273)
யாசித்து வருவோருக்குக் கொடுக்க வேண்டும் என்று செல்வந்தவர்களுக்குக் கட்டளையிடும் இஸ்லாம் யாசித்து வருவதையும் தடுக்கின்றது.
தவிர்க்கவே முடியாத தேவைக்காக யாசிப்பதையும் ஆட்சியாளரிடம் யாசிப்பதையும் தவிர மற்ற யாசகங்கள் மனிதன் தனது முகத்தில் போட்டுக் கொள்ளும் (அவமானச்) சின்னமாகும் என்பது நபிமொழி.
இது போன்ற காரணங்களுக்காக யாசிப்போர் ஐந்தாவதாக இங்கே குறிப்பிடுகிறார்கள்.
ஆறாவது அடிமைகளை விடுவிப்பதற்கும் பொருளாதாரத்தைச் செலவிட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்றைக்கு அடிமைகள் உலகில் எங்குமே இல்லை என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை என்றாலும் அடிமைகள் முற்றாக இல்லாமல் போனதற்கு இவ்வசனமும் இன்னபிற வசனங்களும் அடிமைகளை விலைக்கு வாங்கி விடுவிக்குமாறு ஆர்வமூட்டியதே காரணமாகும். இதை நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்புதல், பொருளாதாரத்தை மேற்கண்ட வழிகளில் செலவிடுதல் ஆகியவற்றுடன் நன்மை முற்றுப் பெறவில்லை. இன்னமும் இருக்கின்றது என்று இவ்வசனம் தொடர்ந்து கூறுகின்றது.
அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்பி, வாரி வழங்கி தொழுகையை நிலைநாட்டுவதுடன் நன்மைகள் முடிந்து விடுவதில்லை. மனிதனுக்குப் பயனளிக்க தக்க நற்பண்புகளையும் நன்மைகளின் பட்டியலில் இறைவன் இடம் பெறச் செய்துள்ளான்.
நன்றி : www.onlinepj.com
அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் 2)
இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்? இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன? இவை தாம் அந்தக் கேள்விகள்.
உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள், சிறையில் வாட வேண்டி வரும். அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்! என்று தான் அவர்களிடம் கூற முடியும். அவர்களிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது. நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாது. நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம். நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடுபடுவர். பலமுறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார். அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன். அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன். இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் நான் தள்ளப்பட்டாலும் நான் செத்துவிடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்று பதிலளிப்பார்கள்.
திருட்டுத் தொழில் உள்ளிட்ட, எந்தக்குற்றங்களில் ஈடுபட்டாலும் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம். இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக்கிடைக்கும் நன்மை என்ன என்ற கேள்விக்கு எந்த விடையும் யாராலும் கூற முடியாது. இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.
சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ,விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும், நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். அவனையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
(அல்குர்ஆன் 2:177)
இந்த வசனம் இஸ்லாத்தைப் பற்றித் தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இஸ்லாத்தின் மேல் ஆட்சேபனை எழுப்பக் கூடியவர்களுக்கும் தெளிவான பதிலைக் கூறுவதுடன் இஸ்லாத்தில் இல்லாத சடங்குகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கும் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்த போது கஃபா ஆலயத்தை நோக்கித் தொழுகை நடத்தி வந்தனர். பின்னர் மதீனா நகருக்கு வந்ததும் ஜெரூசலமில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித் தொழுகை நடத்தலானார்கள். கஃபாவை நோக்கியே தொழுகை நடத்துமாறு இறைவன் கட்டளையிட்டதும் மீண்டும் கஃபாவை நோக்கித் தொழலானார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திசையை அடிக்கடி மாற்றி வந்தது. யூதர்களாலும்,மற்றவர்களாலும் குறை கூறப்பட்டு வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுகை நடத்தியகால கட்டத்தில் "முஹம்மது தமது முன்னோர்களின் தொழும் திசையை மாற்றி விட்டார்'' என்று மக்கா நகர் வாசிகள் குறை கூறினார்கள்.
" நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கி தொழுகை நடத்தத்துவங்கி யதும் பலநபிமார்கள் தொழும் திசையாகக் கருதி வந்த பைத்துல் முகத்தஸை முஹம்மத் மதிக்கவில்லை'' என்று யூதர்கள் விமர்சனம் செய்தனர். திசைகளில் தான் நன்மை இருக்கிறது என்ற மூட நம்பிக்கையைத் தகர்த்து, எது நன்மை என்பதை இவ்வசனம் விளக்குகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட வசனத்தைப் பாருங்கள்!
நன்மை என்பது கிழக்கையோ மேற்கையோ நோக்குவதில் அல்லது இதுபோன்ற புறச் சடங்குகளில் கிடையாது. மாறாக நன்மை என்பது அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்புவது தான் என்றும்அல்லாஹ்வையும் நியாயத்தீர்ப்பு நாளையும் ஒருவன் நம்பி அதற்கு அஞ்சி இவ்வுலகில் ஒழுங்காக வாழ வேண்டும். இதுதான் நன்மை. என்றும் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கும் இதில் விடையிருக்கிறது. அல்லாஹ்வையும் அவன் நியாயமான தீர்ப்பு வழங்கக் கூடிய நாளையும் நம்பி குற்றம் புரிந்தோருக்கு அந்நாளில் தப்ப இயலாத தண்டனை உண்டு. நன்மை செய்தோருக்கு மகத்தான பரிசு உண்டு என்பதையும் நம்பக் கூடியவன் இந்த கேள்விகளைக் கேட்க மாட்டான்.
நன்றி : www.onlinepj.com
Wednesday, August 8, 2012
அர்த்தமுள்ள இஸ்லாம் - (தொடர் 1)
சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் அர்த்தமில்லாத கேளிக்கைகளின் தொகுப்பே மதங்கள் என்ற எண்ணம் பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் ஆகியோரிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. இஸ்லாத்தைப் பற்றி இவர்களின் எண்ணம் இதுவாக இருந்தால் அந்த எண்ணம் முற்றிலும் தவறாகும். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொண்டால் தமது முடிவு தவறு என்பதை உணர்வார்கள்.
இஸ்லாம் என்பது மனித நேயம் மிக்க மார்க்கம்; மனித உரிமைகளை மதிக்கச் சொல்லும் மார்க்கம்; நற்பண்புகளை மனிதர்களிடம் வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட மார்க்கம். சடங்குகள் போன்று தோற்றமளிக்கும் மிகச் சில காரியங்கள் இஸ்லாத்தில் இருந்தாலும் அதன் நோக்கம் மனிதனைப் பக்குவப்படுத்துவது தான்.
தினமும் ஐவேளைத் தொழ வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழுகையில் நின்றும், குனிந்தும், சிரம் பணிந்தும், அமர்ந்தும் முஸ்லிம்கள் இறைவனைத் துதிக்கின்றனர்.
இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன் என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான். இதனால் மனித சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஏராளமாக உள்ளன.
மனிதன் மானத்துடனும், ரோஷத்துடனும், சுயமரியாதையை இழக்காமலும் வாழ வேண்டும் என்று அறிவுடையோர் எதிர்பார்க்கின்றனர். இந்த சுயமரியாதைக்காவே பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.
தன்னை விட எல்லா வகையிலும் குறைந்த நிலையிலுள்ள ஆகாயம், சூரியன், சந்திரன், நெருப்பு, கற்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு முன் மனிதன் மண்டியிட்டு வணங்கும் போது சுயமரியாதையை இழந்து விடுகிறான்.
தன்னை விடத் தாழ்ந்தவற்றுக்கு முன் மண்டியிடும் போதும் இவன் தாழ்ந்து விடுகிறான். தனக்குச் சமமான, தன்னைப் போலவே ஆசாபாசங்கள் உள்ள, தன்னைப் போலவே பலவீனங்கள் நிறைந்த, மலஜலத்தைச் சுமந்திருக்கக் கூடிய இன்னொரு மனிதன் முன்னால் மண்டியிடும் போதும் மனிதன் தனது சுயமரியாதையை இழந்து விடுகின்றான்.
இவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சுயமரியாதைக் காரர்களும் கூட இன்னொரு வடிவில் சுயமரியாதையை இழந்து நிற்கும் பரிதாப நிலையைப் பார்க்கின்றோம்.
கல்லுக்குப் பூஜை செய்யலாமா? அவற்றால் அதை உணர முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டவர்கள் இன்னொரு கல்லுக்கு - பெரியார் சிலைக்கு- மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். என்றோ செத்து விட்ட பெரியார் இதை உணர முடியுமா? என்பதைச் சிந்திக்க மறந்து விட்டனர். சிலைகள் தான் மாறியுள்ளனவே தவிர சிலை வணக்கம் மாறவில்லை.
அனைவரும் சுயமரியாதையை வந்த விலைக்கு விற்றுக் கொண்டு தான் உள்ளனர். விற்கும் சந்தை தான் மாறியுள்ளதே தவிர விற்பனை நின்றதாகத் தெரியவில்லை.
அல்லாஹ் மட்டுமே பெரியவன் என்று ஐங்காலத் தொழுகைகள் மூலம் பயிற்சி பெற்றவன், தன்னை விட உயர்ந்தவனாகிய இறைவன் முன்னிலையில் மட்டும் தான் சிரம் தாழ்த்துவான். வேறு எந்தச் சக்தியின் முன்னேயும் தலை தாழ்த்த மாட்டான்.
இதனால் தான் பதினான்கு நூற்றாண்டுகளாக உண்மை முஸ்லிம்கள் எந்த சக்திக்கும் அடிபணியாமல், எவர் முன்னேயும் சிரம் தாழ்த்தாமல் இன்று வரை சுயமரியாதையோடு கம்பீரமாக நடைபோட்டு வருகின்றனர்.
தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வுக்கு முன்னால் மட்டும் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் போது வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் தன்னைத் தாழ்த்தக் கூடாது என்ற உறுதியைப் பெறுகிறான்.
மேலும் தொழுகையில் இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைப் போற்றிப் புகழ்வதால் இறைவனைப் பற்றிய அச்சம் அதிகரிக்கின்றது. இவ்வுலகில் நல்லவனாக வாழச் செய்கின்றது. குனிந்து, நிமிர்ந்து, சிரம் பணிந்து, தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது
.
தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.
(அல்குர்ஆன் 29:45)
தீமைகளை விட்டும், மானக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம். இந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
நோன்பு என்றொரு கடமை இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைப் பகல் காலங்களில் விட்டு விடுவது நோன்பு எனப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது மனிதன் தன்னைத் தானே வருத்திக் கொள்வது போல் இது தோற்றமளித்தாலும் நோன்பின் நோக்கம் அதுவன்று.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் 2:183)
மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.
தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காகப் பகல் காலங்களில் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து, லஞ்சம் வாங்கி, மோசடி செய்து, பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான். இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.
யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும் உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (1903), (6057)
மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.
வசதி படைத்தவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களைப் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இஜ்த்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் 22:37)
இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.
இறைவனுக்காக எனது உயிர், உடல் அனைத்தையும் தியாகம் செய்வேன். அதன் அடையாளமாகவே இதைப் பலியிடுகிறேன். இறைவனுக்காக, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக என் உயிரைத் தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டால் அதற்கு நான் தயார் என்ற பயிற்சியைப் பெறாமல் அறுத்துப் பலியிடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.
இஸ்லாத்தினுடைய எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.
நன்றி : www.onlinepj.com
Saturday, April 7, 2012
மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 06-04-2012
.jpeg)
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 06-04-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. முஹம்மது அவர்கள் "கண்ணியமிக்க இறைவனின் பார்வையில் நாம்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் நாம் எங்கிருந்த போதிலும் நம்மை அல்லாஹ்வின் பார்வை நம்மை விட்டு விலகுவதில்லை. நாம் செய்கின்ற எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் ஏடுகளில் எழுத்ப்படாமல் இல்லை என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Labels:
ஆன்லைன் நிகழ்ச்சி
Subscribe to:
Comments (Atom)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)